Skip to main content

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெயிலாகும் குழந்தைகளின் நிலை என்ன? அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

5 மற்றும் 8- ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகளை எஸ்எஸ்எல்சி தேர்வுகளை நடத்தும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? அல்லது பள்ளிக்கல்வித்துறையே நடத்துமா? என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.


மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு 5 மற்றும் 8- ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு இது முற்றிலும் எதிராக உள்ளது. கல்வி திட்டத்தை பொறுத்தவரையில் 8- ஆம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெற செய்து அனைவரும் சமமாக கல்வி பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.

5th and 8th public exams school students high court madurai branch

ஆனால் இது அதற்கு எதிராக உள்ளது. மேலும் 5 மற்றும் 8வது படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இல்லை. எந்த மாநிலத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே இம்முறை நடைபெறவுள்ள 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி, மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியைத் தரமானதாக வழங்க வேண்டும் என்பதற்காகவே பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும். இதனால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என்றார். விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்தனர்.

5th and 8th public exams school students high court madurai branch

1. எதன் அடிப்படையில் தமிழக அரசு இந்தத் தேர்வை கொண்டு வந்துள்ளது?

2. அனைவருக்கும் கட்டாயக்கல்வி சட்டத்துக்கு எதிராக இந்த பொதுத்தேர்வு இருக்கிறதே?

3. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?

4. இந்தப் பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?

5. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா?

6. மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன?

7. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?

அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக இந்தக் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தொடக்க கல்வி துறை இயக்குநர் பிப்ரவரி 19- ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பொதுமக்களே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை' - நீதிமன்றம் வேதனை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
'Even when the public complains, no action is taken' - the court is sad

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'Even when the public complains, no action is taken' - the court is sad

இந்நிலையில் 'சட்டவிரோத மது விற்பனையைக் காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர்?' என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தன்னை தாக்கியதால் படுகாயம் அடைந்ததாகவும். இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோதமாக திண்டுக்கல்லில் நகர்ப்பகுதிகளில் மதுபான கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோக்களையும் வழக்கறிஞர் தரப்பு நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அவற்றைப் பார்த்த நீதிபதி, மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளைக் காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோன்ற காவல்துறையினரின் அலட்சியத்தால்தான் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா? சட்டவிரோத மது விற்பனையைப் பொதுமக்களே சென்று வீடியோ, புகைப்படம் எடுத்த பின்பும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்; குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்த காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பி, சம்பந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

வெளியேற்றப்படும் தொழிலாளர்கள்; மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
The court ordered action in the Manjolai case

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். 

குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று திருநெல்வேலி மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாஞ்சோலையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கையை எதுவும் எடுக்காமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். 

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுவதால் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.