திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரம் பட்டு புடவைக்கு மட்டுமல்ல, அரிசிக்கும் பெயர் போன நகரம். அதிலும் களம்பூர் அரிசி தனித்த சுவையுடையது. இந்த அரிசிக்கு தமிழகத்தின் பல பிரபல குடும்பங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஆரணி, களம்பூர் பகுதியை சுற்றி மட்டும் 200க்கும் அதிகமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி மூட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகம். இதனால் நெல் விலை அதிரடியாக குறைந்தது. ஆனாலும் அரிசியின் விலை மட்டும் குறையவேயில்லை. இது நெல் உற்பத்தி செய்த விவசாயிகளிடம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நவம்பர் 14ந் தேதி சென்னை மற்றும் வேலூரில் இருந்து ஆரணியில் உள்ள பிரபலமான 5 மாடர்ன் ரைஸ்மில்களுக்கு வந்த வருமானவரித்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த 5 மில்களிலும் நெல் கொள்முதல் மற்றும் அரசியாக்கி விற்பனை செய்ததற்கான சரியான ஆவணங்கள் பராமரிக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
அதோடு, இந்த மில்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுமதி செய்த அரிசிக்கான கணக்கை வருமான வரித்துறையிடம் தெரிவிக்கவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட 5 ரைஸ்மில் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். வரி ஏய்ப்பு செய்துள்ள இந்த ரைஸ்மில்களில் வருமானத்துறை ஆய்வு நடத்தியது நெல், அரிசி வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கள் மில்லுக்கும் எங்கு வந்துவிடுவார்களோ என பயந்துப்போய் ஆவணங்களை திருத்திக்கொண்டுள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.