கத்திமுனையில் மிரட்டி கூகுள் பேயில் பணம் கொள்ளையடித்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீர்(29), திலீப் (32) ஆகியோர், ஈரோடு வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 14 ம் தேதி 7 பேர் கொண்ட ஒரு கும்பல் சுதீர், திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த ரூபாய் 5,200 ரொக்கத்தை பறித்துக்கொண்டு, இந்த பணம் போதாது என கூறி அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சுதீர், திலீப் ஆகிய இருவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூபாய் .40 ஆயிரத்தை அந்த நபர்களுக்கு அவர்களின் கூகுள் பே வுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுதீர், திலீப் இருவரும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு பெரியவலசு, ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த கார்த்திக், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காட்டுவலசை சேர்ந்த பூபதி, பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ், பிரவீன் ஆகிய இருவரையும் 17 ந்தேதி கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். முன்பெல்லாம் பிளேடு போடுவார்கள், பிட்பாய்கெட் அடிப்பார்கள், அடித்து பிடுங்குவார்கள் என பயந்த காலம் போய் மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்ற பழமொழியை மாற்றி மடியில் பணம், பொருள் என்ற கணம் இல்லாமலேயே வெறும் செல்போன் இருந்தாலே போதும் கொள்ளையர்களிடம் இருந்து நமக்கு ஆபத்து ஏற்படும் என்பது இந்த நவீன டிஜிட்டல் யுகம் நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.