தமிழக, கர்நாடக மாநில எல்லையோர வனப்பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, ஏர்கன் ஆகிய இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல், கர்நாடகா & தமிழக எல்லையில் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லின் மேற்கு கரை கர்நாடகா மாநிலத்தின் ஆலம்பாடி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் சுற்றித் திரிகின்றன. தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக கர்நாடகா வனத்துறை சார்பில் ஆலம்பாடி வனப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, அக். 3ம் தேதி, மர்ம நபர்கள் மூன்று பேர், வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிவது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள், ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலையைச் சேர்ந்த பச்சியண்ணன் மகன் மாரிமுத்து, பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் கவின்குமார், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் என்பது தெரிய வந்தது.,
இதையடுத்து கர்நாடகா மாநிலம் கோபிநத்தம் வனத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக். 4) மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் காற்று அழுத்தத்தால் இயங்கும் 'ஏர் கன்' ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, அவருடன் காட்டுக்குள் சென்ற கவின்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் நள்ளிரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து மூவரையும் கொள்ளோகால் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உண்மையில், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகத்தான் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்தார்களா? அல்லது வேறு ஏதாவது நாச வேலைகளைச் செய்வதற்காக நுழைந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தமிழகம், கர்நாடகா மாநில வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.