கடந்த 22-ம் தேதி மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி கொலை வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மூன்று பேர் இருப்பதாகத் திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசனுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி எஸ்.பி. தனிப்படையினர் அங்குப் பதுங்கி இருந்த 3 நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் நிர்மலா தேவி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.
அதனடிப்படையில் திண்டுக்கல் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார், இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளராக இருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அதன்பின் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதின் பேரில் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் நிர்மலா தேவி கொலை வழக்கு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தும் இருக்கிறார்கள்.