திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி உதவியாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் அறிவித்திருந்தது. முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படுவதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருநங்கைகளுக்கும் கரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 6,553 திருநங்கைகள் பலன் பெறுகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2,953 திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. திருநங்கைகளுக்காக வருவாய் துறை சார்பாக ஏற்கனவே ஆணையம் ஒன்று உள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினராக இவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டார அளவிலும் இதற்கான அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கே சென்று பெற்றுக் கொள்ளலாம். அதற்கான உறுப்பினர் அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.