மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பகீரத முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியைவிட 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றியைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது (ஏப்ரல்-18). காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ல் தேர்தலை நடத்த முன்வந்த தேர்தல் ஆணையம், நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 4 தொகுதிகளுக்கும் மே 19-ல் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 23-ல் நடக்கிறது.
’’தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலவரத்தின்படி பெரும்பான்மை பலமில்லாத அரசாக இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதனால், மே 23-ல் எடப்பாடிக்கு க்ளைமாக்ஸ் உருவாகியிருக்கிறது. ஆட்சிக் நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது மே 23-க்குப் பிறகு தெரியவரும். அந்த வகையில், தனது ஆட்சியை நிலைநிறுத்தும் நெருக்கடியில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை விட , இடைத்தேர்தல் வெற்றியில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி. இதற்காக, ஜெயலலிதா பாணியில் ரகசிய திட்டத்தை கையிலெடுத்துள்ளார் அவர் ’’ என்கிறார்கள் அதிமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள்.
அது என்ன ஜெ.பாணி அரசியல்?
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார். மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மோடி பிரதமர் ஆவார் எனவும் தேசம் முழுவதும் ஒரு அலை வீசிய நேரத்தில், ’தமிழகத்தில் மோடி அலை கிடையாது. மோடியா? இந்த லேடியா? பார்த்துவிடுவோம்‘ என சவால் விடுத்தார் ஜெயலலிதா.
அதற்கேற்ப, வெற்றிப் பெறுவதற்கான வழிகளை தனது செக்ரட்டரிகளிடமும் உளவுத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக விவாதித்துப்படி இருந்தார். உளவுத்துறை அதிகாரிகள், ’ ஓட்டுக்கு பணம் வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஆண்-பெண் வித்தியாசமில்லாமல் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தப்படி இருக்கிறது. வாக்குகளை பர்ச்சேஸ் பண்ணுவதன் மூலம் இலக்கை அடைய முடியும் ’ என யோசனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அந்த பணத்தை எப்போது தரலாம்? என நடத்திய ஆலோசனையில், வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் மக்களிடம் சேர்க்கப்படும்பட்சத்தில் அதனை நினைவில் வைத்திருப்பார்கள் என விவரித்தனர். அதன்படி, காரியத்தை நடத்தி முடித்தார் ஜெயலலிதா.
எப்படி சாதித்தார் ? என அன்றைக்குத் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘’ வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்படும். அதன்பிறகு, வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிக்கலாமே தவிர பிரச்சாரம் செய்ய முடியாது. அதனால், அதிமுகவுக்கு இணையாக திமுகவினர் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வலம் வருவர். ஆளும்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்களா? என கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பார்கள். அதனை மீறி முழுமையாக பணம் கொடுப்பது சாத்தியமில்லை. அப்படியே கொடுத்தாலும் கலவரங்கள்தான் வரும்.
அதனால், கும்பல் கும்பலாக திமுகவினர் சுற்றி வருவதைத் தடுக்க வேண்டுமாயின் 144 தடை உத்தரவு அமலில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். திமுகவினர் கும்பலாக சுற்றுவதை தடுத்தாலே மக்களை நாம் எளிதாக அணுகிவிட முடியும். ஆக, 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி எடுங்கள் என ஜெயலலிதாவிற்கு ஐடியா தந்தனர் அதிகாரிகள்.
இது குறித்து, அன்றைக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ்.சிடம் ஜெயலலிதாவின் செக்ரட்டரிகள் ரகசியமாக ஆலோசித்தனர். அப்போது, டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்தால், 144-ஐ அமல்படுத்த எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறார் பிரவீன்குமார். இந்த விபரம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது சோர்ஸ்கள் மூலம் காய்களை நகர்த்தினார் ஜெயலலிதா. அதற்கேற்ப பிரவீன்குமாருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, ‘ ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தமிழகம் முழுவதுமிருந்து நிறையப் புகார்கள் வருகின்றன. அதனால், அரசியல்கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க, பிரச்சாரம் முடிந்த நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது ‘ என அறிவித்தார் பிரவீன்குமார்.
அதற்கேற்ப திமுகவினரை கண்காணித்தபடி தேர்தல் பார்வையாளர்கள் ஜெயலலிதா போலீஸ் துணையுடன் வலம் வந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் திமுகவினர் திணறினர். அதேசமயம், மற்றொருபுறம் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு இரண்டு நபர்களாகப் பிரிந்து வாக்காளர்களுக்குப் பணத்தை விநியோகித்து முடித்தது அதிமுக. இதுதான் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுத்தது ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஜெயலலிதாவின் இந்த பாணியை கையிலெடுத்திருக்கும் எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் ரகசியமாக இது குறித்து விவாதித்திருப்பதுடன் 144 தடை உத்தரவை அமல் படுத்துவதற்காக டெல்லியின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.