பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகனின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ள சொத்துகள் விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் இடத்தையும் சேர்த்து மோசடி செய்து தனது பெயருக்கு மாற்றியுள்ளார். அதன் பின்னர் அந்த பத்திரப்பதிவை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜிக்கு மாற்றி உள்ளார். இந்த பத்திரப்பதிவு நடைபெற்ற போது சரவண மாரியப்பன் என்பவர் ராதாபுரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
இதையடுத்து இது தொடர்பான புகார் பதிவுத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து பதிவுத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பத்திரப்பதிவை ரத்து செய்து பத்திரப்பதிவு துறை மண்டல துணை தலைவர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 26 ஆம் தேதி வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி துணை ஆட்சியர்கள் ஆகியோரின் பணி சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி 100 கோடி மதிப்பிலான இடத்தை முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதிலளிக்கையில், “இந்த புகார் தொடர்பான நிலம் இரண்டு இடங்களில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பிறகு பதிவுத்துறை மண்டல துணை தலைவர்கள் மூலம் இன்னும் 15 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.