கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர்.வி.எஸ். ரமேஷை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பண்ருட்டி, காடாம்புலியூர், சத்திரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது உதயநிதி பேசியதாவது, "மத்தியில் 5 ஆண்டுகள் ஆண்ட பாஜக மோடி அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி. வரி போட்டு வியாபாரிகளையும், பொதுமக்களையும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது. கடந்த தேர்தலின்போது ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறிய பிரதமர் மோடி மக்களுக்கு பட்டை நாமம்தான் போட்டார்.
மோடி கடந்த 5 ஆண்டுகளில் 45 முறை 55 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவில் பிரதமராக இருந்ததை விட உலகம் சுற்றும் வாலிபராக தான் இருந்தார். அதனால் அவரைத் தோற்கடித்து வெளிநாடுகளுக்கு நிரந்தரமாக அனுப்பி விடலாம்.
தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பொள்ளாட்சியில் பெண்களை சீரழித்த சம்பவமே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நிர்மலாதேவி விவகாரமும், அமைச்சர் ஜெயக்குமார் விவகாரமும் அதிமுக ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களின் சுய நலன்களுக்காக கூட்டணி வைத்துள்ளார்கள். தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாய கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சொன்னதை செய்யும் " என்றார்.