புதுச்சேரி மாநில பா.ஜ.க சார்பில் ‘காண்போம் இனியொரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிஷன் ரெட்டி, “பிரதமர் மோடியின் நல்லாட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக நாட்டில் பல மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், துரதிஷ்டவசமாக புதுச்சேரி வளர்ச்சி அடையாததற்கு இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தான் காரணம். புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய போதும், இங்குள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு அதனைக் கிடைக்காமல் தடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.
புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கப் போவதாக நாராயணசாமி திரும்பத் திரும்ப ஒரு பொய்யைக் கூறி வருகிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் எந்த மாநிலத்துடனும் இணைக்கப்பட மாட்டாது. யூனியன் பிரதேசமாகவே தொடரும்” என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலப் பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏக்கள் கே.ஜி.சங்கர், செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான பிரச்சாரம் நேற்று தொடங்கியது. கனகசெட்டிக்குளம் பகுதியில் தொடங்கிய இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முடக்கிவருகிறார். மாநில வளர்ச்சியைப் பற்றி அவருக்குத் துளியும் அக்கறை கிடையாது. புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார். சட்டப்பேரவை உள்ள ஜம்மு காஷ்மீரை ஏன் யூனியன் பிரதேசமாக மாற்றினீர்கள்? பிரதமர் நரேந்திரமோடி எப்போது வேண்டுமானாலும் புதுச்சேரியை தமிழகத்துடன் இணைத்துவிடுவார். இதை மனதில்கொண்டு அனைவரும் மாநில மக்களின் உரிமைக்காகப் போராட வேண்டும்” என்றார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர்கள் ராஜாங்கம், முருகன், வி.சி.க முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க கபிரியேல் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.