பெங்களூரு பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா, 8ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் பலரும் விமரிசையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சசிகலாவுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூத்தூவி வரவேற்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மணு கொடுக்கப்பட்டுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன். சசிகலாவின் தீவிர விசுவாசி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, டி.டி.வி. தினகரனின் அணியில் இணைந்தார்.
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்டபோது, அதில் ஜெயந்தி பத்மநாபனின் பதவியும் பறிபோனது. அந்த 18 தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் அ.ம.மு.க.சார்பில் குடியாத்தத்தில் போட்டியிட ஜெயந்தி பத்மநாபனுக்கு வாய்ப்பளித்தார் தினகரன். அதில் தோற்றுப் போனார் ஜெயந்தி பத்மநாபன்.
அ.ம.மு.க.விலேயே தொடர்ந்து இருந்து வரும் ஜெயந்தி பத்மாநாபன், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் அவசர மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “சசிகலா தமிழகம் வருவதையொட்டி, மாதனூர் அருகே உள்ள கூத்தம்பாக்கத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது. அப்போது, தனியார் வாடகை ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவி வரவேற்பளிக்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சசிகலாவுக்கு ஏற்படுத்தப்படும் பிரம்மாண்டங்களை ஒடுக்கத் திட்டமிடுகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. இந்நிலையில், அவரது ஆட்சியில் மாவட்ட கலெக்டராக இருப்பவர் இந்த மனுவை ஏற்பதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் இந்த மனு மீது என்ன முடிவெடுப்பது என ஆட்சித் தலைமையிடம் கேட்டுள்ளாராம் கலெக்டர்.