Skip to main content

திமுக பிரமுகர்களை தோற்கடித்த கோஷ்டிப் பூசல் - வேலூர் மாநகர மேயர் யார்?

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Who is the mayor of Vellore?

 

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளில் வேலூர் மாநகரமும் ஒன்று. 4 மண்டலங்கள், 60 வார்டுகள் கொண்டது வேலூர் மாநகராட்சி. மாநகர உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு மாநகராட்சி உறுப்பினர்கள் அன்னபோஸ்டாக தேர்வு செய்யப்பட்டதால் மீதியிருந்த 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

 

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வன்னியராஜா, தனது மனைவி புஷ்பலதாவை மேயராக்க வேண்டும் எனக்கேட்கிறார். துரைமுருகனின் மகன் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், தனது ஆதரவாளரான பூஞ்சோலை சீனுவாசன் தனது மனைவி விமலாவை மேயராக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்.

 

Who is the mayor of Vellore?

 

புஷ்பலதா கடந்த காலத்தில் தாராபடவேடு நகரமன்ற தலைவராக இருந்தவர். விமலா முதல்முறையாக கவுன்சிலராகியுள்ளார். இருவரில் யாரை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது என தெரியாமல் பஞ்சாயத்து நடந்துவருகிறது. இருவருமே கோடிக்கணக்கில் செலவு செய்ய தயாராக உள்ளார்கள். இந்த இருவருக்கிடையே வேலூர் மாநகர செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ தனது ஆதரவாளரான சுஜாதாவை முன்னிறுத்துகிறார்.

 

மேயருக்கு அடுத்தபடியாக துணைமேயர் யார் என்கிற கேள்வியும் எதிரொலிக்கிறது. துணை மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காக வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏவை வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள்.

 

மாவட்ட செயலாளர் நந்தகுமாரின் ஆதரவாளரான தங்கதுரை, முன்னாள் எதிர்கட்சி மாநகர தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மண்டல குழு தலைவர் ஐய்யப்பன் போன்ற திமுக பிரமுகர்கள் தோல்வியடைந்தனர். இவர்களை திட்டமிட்டே கோஷ்டிப் பூசல் தோற்கடித்துள்ளது என்கிற கொதிப்பில் உள்ளார் நந்தகுமார்.

 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வேலூர் மாநகர தேர்தலில் திமுக மா.செ நந்தகுமாரை குறிவைத்து அறிக்கை வெளியிட்டு தாக்கினார். இதனால் பாமக போட்டியிட்ட 25 வார்டுகளில் தோற்கடிக்க வேண்டுமென தீவிரமாக பணியாற்றி அதில் வெற்றி பெற்றார் நந்தகுமார். ஆனால் தனது ஆதரவாளர்களை உட்கட்சி பூசலால் தோற்கடித்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்