தமிழகத்தில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையில் வடசேரி, மகாதேவபட்டினம், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதேநேரம் புதிய நிலக்கரி சுரங்கம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என நிலக்கரி சுரங்கம் தொடர்பான அறிவிப்புக்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள விளக்கத்தில், 'ஆரம்பக்கட்ட ஆய்வுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஒரு ஆரம்பக்கட்ட ஆய்வு. நாடு முழுவதும் இதுபோன்று எங்கெங்கெல்லாம் கனிமங்கள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சுரங்க நிறுவனம் ஆய்வு மேற்கொள்வார்கள். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மண்டலமாக டெல்டா மண்டலம் அறிவிக்கப்பட்டது. அதன் சட்டம் அமலில் இருக்கிறது.
தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரிய வந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள். மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கடந்த 65 ஆண்டுகளாக நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் தண்ணீரையும், விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தி கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு ஆய்வு நடத்தணும். அதை யார் நடத்த வேண்டும் என்றால் மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் அங்கு மூன்று மாத காலத்தில் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பாதிப்புகளை அதாவது வேளாண் சார்ந்த பாதிப்புகள், நீர் சார்ந்த பாதிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள், சமூகம் சார்ந்த பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகள் நடத்தி எவ்வளவு பாதிப்பு இருக்கு என்று கண்டறிய வேண்டும். இது அவசியமானது.
அமைச்சர்களிடம் கேட்டால் அமைச்சர் சொல்கிறார் என்.எல்.சி நிறுவனம் இல்லை என்றால் தமிழ்நாடு இருளில் மூழ்கி விடும் என்கிறார். இது எவ்வளவு பொய்யான ஸ்டேட்மெண்ட். தமிழ்நாட்டினுடைய மின் உற்பத்தி, அரசும் தனியாரும் சேர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2022-ன் புள்ளி விவரங்கள் படி 35 ஆயிரம் மெகாவாட். தமிழ்நாட்டின் உச்ச தேவை ஒரு நாளைக்கு 18,000 மெகாவாட். உற்பத்தி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருக்கிறது. தமிழ்நாடு இன்று மின் மிகை மாநிலம். ஆனால் என்.எல்.சி கொடுக்கிற 800 மெகா வாட், ஆயிரம் மெகாவாட் கரண்ட் மாசடைந்த மின்சாரம். ரொம்ப மோசமான பொல்யூஷன் கொண்ட கரண்ட் நமக்கு கொடுக்கிறார்கள்.
அவர்கள் கொடுக்கிற இந்த 800 மெகாவாட் மின்சாரத்திற்கு நமது வாழ்வாதாரத்தை அழித்து, சுற்றுச்சூழலை அழித்து இப்போ டெல்டாவையும் அழிக்க போறாங்க. அப்படிப்பட்ட மின்சாரம் நமக்கு தேவையா. நாம மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஏலம் அறிவிக்கப்பட்ட ஆறு சுரங்க திட்டங்களில் ஐந்து சுரங்க திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கும். ஏலம் விடும் அளவிற்கு தமிழ்நாடு அரசு என்ன செய்துகொண்டிருந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.