Skip to main content

பதவி விலகலைத் திரும்பப் பெற்றதன் காரணம் என்ன? - சரத்பவார் விளக்கம்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

What is the reason for withdrawal of resignation? Explanation of Sharadpawar

 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்பவார், தான் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்த மாதம் 2 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் சரத்பவார் தனது முடிவை மாற்ற வேண்டும் எனக் கூறி வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 5 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 4 உறுப்பினர்களும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் 54 சட்டமன்ற உறுப்பினர்களும், கேரளாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும், குஜராத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓரிரு தினங்கள் முன் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் நீடிப்பார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், “என்சிபியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்துக்கொள்வதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன். நாடாளுமன்ற பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. எதிர்காலத்தில் மாநில மற்றும் நாடு அளவில் என்சிபியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு நல்ல அணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதனால் ஒதுங்கி அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளிக்க நினைத்தேன்.

 

எனது ராஜினாமாவுக்கு எனது கட்சி இவ்வளவு கடுமையாக பதிலளிக்கும் என்பதை நான் உணரவில்லை. தேசிய அளவிலான பல தலைவர்களும் எனது முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இன்னும் ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் வரவுள்ளது. எனவே இந்த தருணத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது சரியாக இருக்காது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்