‘நக்கீரன் வாக்கு பலித்திருக்கிறது..’ என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். காரணம் – கடந்த ஜூன் 17-19 நக்கீரன் இதழில் ‘அதிமுகவுக்கு 3 மா.செ.! அப்படின்னா கே.டி.ராஜேந்திரபாலாஜி?’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைதான்!
அதில், ‘விருதுநகர் மாவட்டத்தில் தேவர், நாயக்கர், நாடார் என மூன்று பிரிவினர்களை மனதில் வைத்து, மூன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த மூவரைத் தேர்வு செய்வதில், முன்னாள் மா.செ.வான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆலோசனையோ, சிபாரிசோ நிச்சயம் ஏற்கப்படும். மூன்று மா.செ.க்களில் ஒருவராக கே.டி. ராஜேந்திரபாலாஜியே இருக்கலாம். அனேகமாக, அதற்கு அவர் ஒத்துக் கொள்ள மாட்டார்.
தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், புதிய மா.செ.க்கள் நியமனம், எந்த தரப்பிலிருந்தும் அதிருப்தியையோ, சலசலப்பையோ ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை கட்சித் தலைமை கவனத்தில் கொள்ளாமல் இல்லை. அதனால், விருதுநகர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டாலும், மூன்றையும் கவனித்துக்கொள்ளும் மண்டல அளவிலான பொறுப்பினை கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தரக்கூடும்.’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
கடந்த 22-3-2020 அன்று, தமிழக பால்வளத்துறை அமைச்சர், கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்தது. கடந்த 102 நாட்களாக, விருதுநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், இன்று விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழகப் பணிகளைக் கவனிப்பதற்கு பொறுப்பாளராக, கே.டி.ராஜேந்திரபாலாஜி நியமிக்கப்படுகிறார், என்று தலைமைக் கழகத்திலிருந்து அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
‘அமைச்சர் பதவியும் அம்பேல்தான்..’ என, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அரசியல் செய்து வந்தவர்கள் கம்பு சுற்றிய நிலையில், என்ன மாயமோ செய்து, தன்னை ஒதுக்க நினைத்த கட்சித் தலைமையின் மனதில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி. குறிப்பாக, ‘மா.செ. பொறுப்பிலிருந்து நீக்கினாலும் நான் ஓய்ந்துவிட மாட்டேன்‘ என, அமைச்சராக மாவட்டம் முழுவதும் வலம் வந்து, கரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு, அரசுத் திட்டங்களை நிறைவேற்றும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, தன்னை, அவர் பிசியாகவே வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியான திமுகவையும், குறிப்பாக மு.க.ஸ்டாலினையும், கடுமையாக விமர்சிப்பதற்கு, ‘இவர்தான் மிகச்சரியாக இருப்பார்..’ என எடப்பாடி கணித்ததும், விருதுநகர் மாவட்ட அரசியலில், மீண்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஏற்றம் பெற வைத்துள்ளது.