Skip to main content

பிரபல கொடூர ரவுடி என்கவுண்டர்... பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

Vikas Dubey up

 

சந்தேகத்திற்குரிய விகாஸ் துபே என்கவுண்டர் கொலையின் பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விகாஸ் துபே என்ற உத்திரப்பிரதேசம் சார்ந்த மிகக் கொடூரமான பிரபல ரவுடி, நீதிநெறிமுறைக்கு புறம்பாகச் சந்தேகத்திற்குரிய வகையில் கொல்லப்பட்டதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், பாகுபாடில்லாத நீதிவிசாரணை வாயிலாக, அதன் பின்னணியிலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

யோகி ஆதித்யநாத் எனும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த சாமியார் ஆளும் உத்திரப்பிரதேசத்தில் காட்டு தர்பார் நடப்பதுடன், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதிநெறிமுறை, சட்டபூர்வ விசாரணை ஆகியவைக் காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

 

கொடூர குண்டர் கும்பலின் தலைவன் விகாஸ் துபேவைக் கைது செய்யவந்த காவல்துறையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 8 காவல் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்று ஒரு வாரகாலமாக தலைமறைவான நிலையில், உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபே காவல்துறையிடம் சரணடைந்தார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு சொல்வதாவது, "கடந்த வெள்ளியன்று விகாஸ் துபேவைக் கைது செய்து உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வாகனம் கவிழ்ந்ததாகவும், காயமுற்ற ஒரு காவலரின் துப்பாக்கியைப் பறித்துக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த விகாஸ் முயன்றபோது, தற்காப்புக் கருதி காவல்துறையினர் என்கவுன்டர் செய்து கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.  காவல்துறையிடம் ஏற்கனவே சரணடைந்த ஒரு குற்றவாளி காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து ஏன் தப்பிக்க முயலவேண்டும்? என்ற ஐயம் அனைவரின் மனதிலும் தோன்றுவதும் இயல்பே. இந்த நம்பகத்தன்மை இல்லாத எழுதித் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை பற்றி ஓய்வுபெற்ற ஐ.பி.ஸ். அதிகாரிகளே கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

 

விகாஸ் துபே சரணடைந்த பின் கைது செய்யப்பட்டு, கான்பூர் கொண்டுச் செல்லப்பட்ட காவல்துறைக் குழுவைப் பின்தொடர்ந்து சென்ற ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, "இந்த என்கவுண்டர் என்பது அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே", என்பதாகும். என்கவுண்டர் செய்யப்படுவதற்கு சற்றுமுன்பு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தைத் தொடர்ந்த பிற காவல்துறை வாகனங்கள் பின்தங்கும் வகையில் இடைமறித்து நிறுத்த காவல்துறையால் நிர்பந்திக்கப்பட்டன." என்று ஊடகவியலாளர் தெரிவிக்கின்றனர்.

 

ஊடகவியலாளரின் வாகனங்கள் சோதிக்கப்பட்ட பின் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில் எதிர்பாராதவாறு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் கவிழ்ந்ததாகவும், விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் ஊடகவியலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டர்கள் தலைவனின் ஐந்து கூட்டாளிகள் ஏற்கனவே பல என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அறிந்ததே.

 

பல்வேறு கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய விகாஸ் துபே பிரபல அரசியல்வாதிகளின் முழு ஆதரவோடு கடந்த இருபது ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுன்டர் என்ற சாக்கில் சுட்டுக்கொன்றதால் விகாஸ் துபேவுடன் நீண்டகாலத் தொடர்பிலிருந்த ஊழல் அரசியல்வாதிகளை காவல்துறை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் காப்பாற்றியுள்ளது கண்கூடு.

 

ஜனநாயத்தின் மீதும் மதச்சார்பின்மையின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள அனைவரும், உ.பி. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தயக்கமில்லாமல் எழுச்சிகொண்டு முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp

 

மேலும், விகாஸ் துபே என்கவுண்டர் கொலை தொடர்பாக, இப்போது பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளுடன் மோசமான கொடும் குற்றவாளி  துபே கொண்டிருந்த பாவமிக்க தொடர்புகளை வெளிப்படுத்துவதோடு, நீதிநெறிமுறைக்குப் புறம்பாக நடத்தப்பட்ட போலி என்கவுன்டரின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மைநிலையை வெளிக்கொண்டுவர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். இவ்வாறு முஹம்மது ஷஃபி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்