கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. 7 இடங்களையும், பாமக 2 இடங்களையும், சுயேட்சை 5 இடங்களையும், தி.மு.க 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இரண்டு தரப்பினரும் தேர்தலுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குவிந்தனர். அதேசமயம் தி.மு.க அணிக்கு அதிகப்படியான ஆதரவு இருக்கும் என்ற நிலையில் தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரன் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு அன்று தேர்தல் நடத்தவில்லை. தேர்தல் ஒத்தி
வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஒன்றியகுழு தலைவர்க்கான மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நல்லூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பலத்த பாதுகாப்புடன், ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். 11 மணி அளவில் தேர்தல் அதிகாரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.கவை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் தி.மு.க தரப்பில், முத்துக்கண்ணு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நடைபெற்ற மறைமுக தேர்தலில் பாமக வேட்பாளர் செல்வி ஆடியபாதம் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் முத்துக்கண்ணு 9 வாக்குகள் பெற்றார். இதனிடையே தேர்தல் அதிகாரி முறைகேடு செய்ததாக தி.மு.க வேட்பாளர் முத்துக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.