
இரண்டாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை மீண்டும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரையை நேற்று 20ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை முன்னாள் தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்த வீட்டில் இருந்து தொடங்கினார். காவல்துறையின் அனுமதியை மீறி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். பின் அவரை மண்டபத்தில் அடைத்து இரவு விடுவித்தனர். அதன்பிறகு தலைஞாயிறு, செம்போடை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். அகஸ்தியம்பள்ளியில் உப்பள தொழிலாளர்களை சந்திக்க சென்றவரை அங்கு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கே.என்.நேரு, ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட முக்கிய தி.மு.க.வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு மூன்று வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். முதல்நாள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வந்தவர் இரண்டாம் நாள் பிரச்சாரத்தை இன்று துவங்கினார்.
நாகை அக்கரைபேட்டை மீன் பிடி துறைமுகத்தில் காவல்துறையினரின் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் மீனவர்களை சந்தித்தார். தொடர்ந்து மீனவர்களோடு படகில் பயணம் செய்த உதயநிதி, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அடுத்த இடத்திற்கு கிளம்பியவரை தடுத்து நிறுத்திய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உதயநிதியின் கைது சம்பவத்தை கண்டித்து அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், மீனவர்களும் தரையில் படுத்தும், வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தி.மு.க.வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
கைது செய்தபின் வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அ.தி.மு.க. அரசு பயப்படுகிறது. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. என்னுடைய பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள். குறைவான நபர்களே பங்கேற்ற எங்களை கைது செய்கிறார்கள். ஆனால் பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா, மோடி, கலந்து கொண்டார்கள், அவர்களை கைது செய்யவில்லை. தற்போது எங்கள் பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்கிறார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைவரிடம் பேசி முடிவெடுப்போம். விடுதலை செய்தார்கள் என்றால் இன்றைய நிகழ்ச்சிகளை மீண்டும் தொடர்ந்து நடத்துவேன்” என்றார்.