சென்னை அமைந்தகரையில் சமீபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாகவும் அவர் பேசியதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அரசியல் என்பது நேர்மையாக நாணயமாக பணமில்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் மாற்றம் என்பது ஆயிரம் வருடமானாலும் நடக்காது என்ற எண்ணவோட்டத்திற்கு நான் வந்துவிட்டேன். அதை நான் என் கட்சிக்குள்ளும் பேச ஆரம்பித்துள்ளேன். வரும் காலங்களில் இன்னும் ஆக்ரோஷமாக தான் பேச போகிறேன். ஆனால், கூட்டணி என்று வரும்போது அந்த நேரத்தில் எங்கள் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
நான் வேலையைவிட்டுவிட்டு ஒரு மாற்றத்தை கொடுக்கவேண்டும் என்று வந்துள்ளேன். அதனால், நான் சில தவறுகளை செய்ய தயாராக இல்லை. இந்த அடிப்படையில் நான் அன்று சில வார்த்தைகளை பேசியிருந்தேன். கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை.
நான் போலீஸில் ஒன்பது வருடமாக சம்பாரித்து சிறுக சிறுக சேர்த்துவைத்த பணமெல்லாம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. தேர்தல் முடிந்து நான் கடனாளியாக உள்ளேன். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் ரூ. 80 கோடியிலிருந்து ரூ. 120 கோடிவரை செலவு செய்யவேண்டும் என்பது ஒரு சாதாரண கணக்கு. வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டு நாம் நேர்மையான அரசியல்; மாற்று அரசியல் செய்கிறோம் என பேசமுடியாது. இரண்டு வருடமாக பார்த்துவிட்டேன் தமிழ்நாடு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என என் உள்மன சொல்கிறது. எங்கள் சார்பாக நிற்கும் வேட்பாளர், ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்கமாட்டார்கள் எனச் சொல்லும்போது அதுக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.
இது என் தனிப்பட்ட கருத்து; இனி நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் இந்தப் பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவை நான் எடுக்க ஆரம்பித்துவிட்டேன் நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்றால் அப்படிபட்ட அரசியல் எனக்கு வேண்டாம் எனும் முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
அந்தக் கட்சி பணம் கொடுத்தது; இந்தக் கட்சி பணம் கொடுத்தது என நான் சொல்லவரவில்லை. அந்த அந்தக் கட்சி அவர்களின் யுத்தியின்படி அவர்கள் நடத்துகிறார்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், முதலமைச்சராகவும் வருகிறார்கள். அதைப் பற்றி குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.