Skip to main content

"ஆன்மீகம் எனும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார்" - திருமாவளவன் பேட்டி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Thol Thirumavalavan addressed press and comment on Governor RN Ravi

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடலூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில், கடலூர் சுற்றுலா மாளிகையில் அவரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது திருமாவளவன், “குஜராத்தில் மோர்பி எனுமிடத்தில் தொங்குபாலம் இடிந்து 130க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கோர விபத்தில் உயிரிழந்த  ஒவ்வொருவருக்கும் இந்திய அரசும், குஜராத் அரசும் இணைந்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது. தி.மு.கவுக்கு எதிராக அவர் வகிக்கும் பதவிக்கு முரண்பாடாக ஆளுநரே ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல செயல்படுகின்றார். ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி மதவாதம் பேசுகின்றார். கோவையில் நடைபெற்றது விபத்தோ அல்லது தாக்குதலோ என்று தெரியாத நிலையில் முபின் தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. அரசுக்கு கலங்கம் விளைவிக்கவே பேசி வருகின்றனர்.

 

இவ்வழக்கை தேசியப் புலனாய்வு முகமை எடுத்து விசாரிக்க வேண்டும். இச்செயலில் பா.ஜ.கவை வி.சி.க. கடுமையாகக் கண்டிக்கின்றது. தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது. மதவாத அரசியலுக்குத் தமிழகத்தில் இடமில்லை.

 

அண்ணாமலைக்கு 'விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது' அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். தனிநபர் பெயர் உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது. இந்தித் திணிப்பு என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றி விட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதை ஏற்க முடியாது. இது ஐனநாயகத்திற்கு எதிரானது. அவர்கள் மதவாத தேசியவாதிகள். நவம்பர் 6-ஆம் தேதி 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்ட 'மனுஸ்மிரிதி' தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளோம்" என்றார். பேட்டியின் போது கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்