Skip to main content

உயிர்களைக் காவு வாங்குவதற்கா இந்த அறிவிப்பு? - திருமாவளவன் எம்.பி. கண்டனம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Thirumavalavan condemns the withdrawal of Rs 2000 notes

 

2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி செப்.30 ஆம் தேதி வரை மட்டுமே 2000 செல்லும் என்றும் அதுவரை பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சக்கட்டமாகும்.

 

2016ல் பண மதிப்பு இழப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. தங்களிடமிருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. அப்படி மாற்றுவதற்காக வங்கிகளின் முன்னால் கோடிக் கணக்கான மக்கள் கால் கடுக்க நின்றனர். வரிசையில் நிற்கும்போதே பலர் உயிரிழந்தனர். 2016 திசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திரு. டெரக் ஓப்ரியன் வெளியிட்ட புள்ளி விவரம் 105 பேர் அப்படி வங்கிகளின் முன்னால் வரிசையில் காத்திருக்கும்போதும், அதிர்ச்சியிலும் இறந்தனர் எனக் கூறியது. இப்போதும் அதேபோன்று உயிர்களைக் காவு வாங்குவதற்காகத்தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

தற்போது 3.62 லட்சம் கோடி மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. ஒருவர் ஒருமுறை பத்து நோட்டுகளை மட்டுமே வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என அரசு அறிவித்திருப்பதால் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால்கூட 5 முறை அவர் வங்கிக்குச் சென்று மாற்றவேண்டும். இப்போதும்கூட பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலேயே வணிகம் செய்யும் சிறு வணிகர்களை இது மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் நோட்டுக்கென செய்யப்பட்ட மாற்றங்கள் இப்போது வீணாகியுள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் விரயமாகியுள்ளது.

 

இந்த அறிவிப்பின் பின்னால் பொருளாதார நோக்கத்தைவிட அரசியல் நோக்கமே அதிகம் உள்ளதெனத் தெரிகிறது. 2016ல் உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு முன்பு 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டன. இப்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பண மதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஐந்தே நாட்களில் குஜராத் மாநிலத்தில் பாஜகவுடன் தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் 3118 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதை அப்போதே காங்கிரஸ் கட்சி ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது. முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள், அதனால் இதை 'சட்டப்பூர்வமான கொள்ளை' என விமர்சித்தார். இப்போதும் அப்படித்தான் நடக்கப்போகிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

 

ஏற்கனவே விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பாதிப்பை இந்த அறிவிப்பு அதிகப்படுத்தவே செய்யும். இந்த முன்யோசனையற்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.