தனக்கிருந்த கொலை மிரட்டலை போலீசில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கொலையாளிகளை கொலைக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ் சிறைப்படுத்துவதோடு, மோசஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்தவர் மோசஸ். இவர் இந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோத, சட்ட விரோத சம்பவங்களை அம்பலப்படுத்தி செய்தியளித்து வந்தார். இதனால் இவருக்கு தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் வந்துகொண்டிருந்தது.
கொலை மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை மோசஸ் போலீசிலும் புகார் செய்திருந்தார். ஆனால் போலீசின் அலட்சியம் கடைசியில் மோசஸின் கொலையில் போய் முடிந்துள்ளது.
திருவள்ளூர் பகுதியில் கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருப்பதை மோசஸ் கண்டுபிடித்துள்ளார். அதனைச் செய்தியாக அளித்து அம்பலப்படுத்தியுள்ளார் மோசஸ். அதன் காரணமாக சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகள் மோசஸ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை எடுத்து சொல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் மோசஸ். ஆனால் அந்தப் புகார் தூங்கிக் கொண்டிருந்ததே தவிர, அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அறிந்துதான் அந்த சட்ட விரோத, சமூக விரோத குற்றவாளிகளுக்கு துணிச்சல் வந்திருக்க வேண்டும்; மோசஸைப் படுகொலை செய்து விட்டிருக்கின்றனர்.
முன்கூட்டிப் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்த சட்ட விரோத, சமூக விரோதக் குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவே தமிழக அரசு இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதில் உடந்தையாக செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஊடக துறையினர் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகியிருப்பதையும் மோசஸின் படுகொலை சுட்டிக் காட்டுகிறது. இது மிக மிக ஆபத்தான சூழ்நிலையாகும்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, கொலையாளிகள் கொலைக் குற்றத் தண்டனை பெறுவதினின்றும் தப்பிவிடாதபடி நடவடிக்கை எடுத்து உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது மட்டுமல்ல; பேராபத்தினையும் விளைவிக்கக் கூடியது. எனவே இந்தப் பயங்கரமான நிலையைப் போக்கும்படித் தக்க சட்ட நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
தனக்கிருந்த கொலை மிரட்டலை போலீசில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை! கொலையாளிகளை கொலைக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ் சிறைப்படுத்துவதோடு, மோசஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி'' இவ்வாறு கூறியுள்ளார்.