சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
அப்போது அவர்,
ஒட்டுமொத்தமாக மோடியின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி நிறைவடையப்போகிறதே, அதே ஆட்சி மறுபடியும் தொடரப்போகிறதே என்ற ஆதங்கத்தில் இப்போது ரபேலை கையில் எடுத்திருக்கிறார்கள். இதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் நிரூபணமாகியிருக்கிறது. பிரான்சிலும் அங்கு உள்ள அதிகாரிகளால் சொல்லியாகிவிட்டது. ராணுவ அமைச்சர் தெளிவான விளக்கத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
வேறு எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாத காரணத்தினால் இந்த ரபேலை எடுத்திருக்கிறார்கள். இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. அதனால்தான் மோடி, ஊழல் செய்பவர்களை நான் விடமாட்டேன், நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். ஒரு கடிதத்தை எடுத்து அதனை வெட்டி, ஒட்டி செய்கிறார்கள். உண்மை எப்போதும் வெளியே வரும். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.
20 லட்சம் சாமானிய ஏழை மக்களின் பணத்தை சுருட்டிய சாரதா சிட் பண்ட் ஊழலில் சிக்கிய கட்சியைச் சேர்ந்தவர் மம்தா பானர்ஜி. மம்தாவிடம் இருந்து சர்டிஃபிகேட் மோடிக்கு தேவையில்லை. மக்களிடம் இருந்துதான் சர்டிஃபிகேட் வேண்டும். மக்கள் இன்று எல்லாவிதத்திலும் ஊழல் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
டெண்டரெல்லாம் இடெண்டரில் போகுது. தொழிலதிபர்களை பார்த்தீர்கள் என்றால், இடைத்தரகர்களை பார்க்க வேண்டும், அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டும் என்பார்கள். இப்போது அப்படியில்லை. நேரடியாக தங்களது தொழிலுக்கான அனுமதி கிடைக்கிறது என்கிறார்கள். இனிமேல்தான் ஊழலற்ற தன்மையின் இனிப்பை மக்கள் சுவைக்கப்போகிறார்கள். மக்களுக்கு இந்த சுவை தெரியும். ஆனால் ஊழலை வைத்தே அரசியலை செய்பவர்களுக்கு இந்த சூழ்நிலை கசப்பாக இருக்கும். அதைத்தான் மம்தா போன்றவர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கூறினார்.