திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் 102 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அருகே நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வாசுகி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...
அதிமுக ஆட்சியை ஒழிக்க, தினமும் போராட்டம், நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு என எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. டிடிவி தினகரன் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் என்று இரண்டு ஆண்டுகளாக கதைகளாக சொல்லி வருகிறார். அவர் தனது சின்னம்மாவுடன் சேர்ந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற எத்தனையோ முயற்சி செய்தார். அத்தனையும் கடந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக எப்பவும் தயாராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு சரியாக வழங்கவில்லை என்று கூறி திமுக வழக்கு தொடர்ந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தினாலும் தடை கேட்டு வழக்கு தொடர்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு மு.க. ஸ்டாலினும், திமுகவும்தான் காரணம். அவர் இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் அவர் மிதக்கிறார் ஆனால் அந்த கனவு நிறைவேறாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார்.
தாராளமாக சிபிஐ விசாரணை நடத்தட்டும்
2ஜி வழக்கு விசாரணை நடந்தபோது சாதிக்பாட்சா மர்மமாக இறந்தார் அதேபோல் அண்ணாநகர் ரமேஷ் மரணத்தில் மர்மம் உள்ளது. இவ்விரு வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் யார் சிக்குவார்கள் என்பது தெரியவரும் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது, தேர்தல் அறிவித்தாலும் கூட்டணி அமையலாம். ஆனால் அம்மா வழியில் தனியாக சந்திப்பது என்ற சிந்தனையில் இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் ஊர், ஊராக சென்றார். அதுபோல் தற்போது ஒரு ஊருக்கு கிராம சபை கூட்டத்தை போட்டு வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது ஒரு ஊரில் ஏதாவது இப்படி கிராமசபை கூட்டம் போட்டு மக்களின் குறைகளை கேட்டு இருக்கிறாரா? தற்பொழுது பொங்கல் போனஸ் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஆயிரம் ரூபாயை மக்களுக்கு கொடுத்தனர். அந்த எழுச்சி மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருந்துவருகிறது. அதற்காக தான் இப்படி ஒரு கிராம சபை கூட்டத்தை போட்டு வருகிறார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினார். பாலம் வேலை நடக்கவில்லை என்றால் தவறு நடக்கிறது கமிஷன் எதிர்பார்க்கிறார்கள். அதிகாரிகள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள். பில் கலெக்டர்கள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள், பல்வேறு அதிகாரிகள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தான் கமிஷன் எதிர்பார்க்கிறேன் என்று அபாண்டமாக பொய் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார். நான் அப்படிப்பட்டவனும் அல்ல. அந்த மக்களுக்கு சேர வேண்டிய பணம் எல்லாம் அவர்களுடைய பெயர்களில் வங்கியில் இருக்கிறது. என் மீது பொய் குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மீது சட்டரீதியாக வழக்குத் தொடர தயாராக இருக்கிறேன் என்று கூறினார்
.
இக் கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம், ராஜ்மோகன் மற்றும் மாநகர பகுதி செயலாளர் சுப்பிரமணி துளசிராம், மோகன் சேசு, மாவட்ட அண்ணா நூற்பாலை தொழில்சங்கசெயலாளர் ஜெயராமன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.