திருச்சி மணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை என்பதால் இங்கே மத்தியில் ஆள்பவர்களுக்கு இலவசமாக 33 அமைச்சர்களும், 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் கிடைத்திருக்கின்ற காரணத்தினால், தலையாட்டி பொம்மைகளாக இருக்கின்றனர். எடுபிடிகளாக இவர்கள் இருக்கும் காரணத்தினால்தான் இவர்களை மத்தியில் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதனால் தமிழக மக்களாகிய நாம்தான் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
இந்த ஆட்சியாளர்கள் தாங்களும், தங்கள் எடுபிடிகளும், அமைச்சர்களும், பினாமிகளும் வாழ்ந்தால் போதும் என்று இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 8 கோடி தமிழர்களும் இங்கு வாடிக்கொண்டிருக்க 33 அமைச்சர்களும் அவர்களது நல விரும்பிகளும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆட்சியில் சம்பந்திகளும், சகலைகளும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழக மக்கள் யாருக்கும் எந்தவொரு திட்டமும் சென்றடையவில்லை. அதனால்தான் எந்த ஒரு இடைத்தேர்தலையும் நடத்தாமல், உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த விடாமல் இவர்கள் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தால் ஆட்சிக்கு முடிவு வந்துவிடும் என்பதால் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருகிறார்கள். இவ்வாறு பேசினார்.