காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழல் மோடி செய்துள்ளார். சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இறந்துபோன 88 ஆயிரம் நபர்களின் பெயர்களை பயன்படுத்தி காப்பீடு பணம் எடுக்கப்பட்டுள்ளது. மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி முன்வந்து மோடி மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
ஆளுநர் ரவி, கிண்டி ராஜ்பவனில் இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாட்சி கொடுக்கும் ஸ்டாலின் அரசிற்கு இடைஞ்சல் கொடுக்கிறார். திமுகவினர் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இதனை ஆளுநர் செய்தால் தமிழக மக்கள் அவரை ஊரை விட்டு விரட்டுவார்கள். சட்ட சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
டி.என்.பி.எஸ்.சி.க்கு தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க ஆளுநர் ரவி தடையாக இருக்கிறார். ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபு தேர்ந்தெடுக்கப்பட்டது நல்ல முடிவுதான். காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவார்.
அண்ணாமலை மேற்கொள்வது நடைபயணம் இல்லை பஸ் பயணம் தான். இந்த பாதயாத்திரை முடிந்த பிறகு காணாமல் போய்விடுவார். ரஜினி கடவுள் நம்பிக்கை உடையவர். எனக்கு ரஜினி மீது மரியாதை உள்ளது. உ.பி யோகியின் காலில் விழுந்தது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் வழக்கை சந்தித்து நிரபராதிகள் என நிரூபிப்பார்கள்.
அதிமுக மாநாடு புளியோதரை மாநாடு என்று சொல்ல வேண்டும். 60 ஆயிரம் பேர் கலந்துகொண்ட மாநாட்டை 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுவது காதில் பூ சுற்றுவது போன்றது. காங்கிரஸ் நீட் தேர்வு தீர்மானம் கொண்டு வந்ததில், விரும்பாத மாநிலத்தில் அமல்படுத்த தேவையில்லை என்று இருந்தது. சத்தியராஜிற்கு கொள்கை இருப்பதால் புரட்சி தமிழர் என்பது நூற்றுக்கு நூறு அவருக்கு பொருந்தும்.
பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் வகையில் கயிறு கட்டிக்கொள்கிறார்கள். இதனை அரசு தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டும். சிறு வயதில் சாதி இல்லை என்ற எண்ணம் வரவேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக உங்கள் பெயர் அடிப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், “நான் எந்த பதவிக்கும் ஆசைப் படுவதில்லை. இளைஞர்கள் வரவேண்டும் என நினைக்கிறேன். இருப்பதே போதும்” என்றார்.