அதிமுகவில் நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து, அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஓபிஎஸ் அணி எடப்பாடி அணி என அதிமுக பிரிந்து கிடக்கிறது. இச்சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்கள் தரப்பு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தியும், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமாரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வெளியிடும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறிவருகிறது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், 'ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து உங்களுடைய பலத்தை நீங்கள் காமியுங்கள்' எனச் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ''தனிச் சின்னத்தில் நின்று வெற்றிபெறும் அளவிற்குத் தகுதி படைத்தவன் நான்; எம்ஜிஆர் என்ன எம்ஜிஆர், ஜெயலலிதா என்ன ஜெயலலிதா என்று சொன்னது எடப்பாடி பழனிசாமி. அதற்கான ரெக்கார்ட் எங்களிடம் இருக்கிறது. அதை ஒருவரிடம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி. சின்னமே முடக்கப்பட்டாலும் தனிச் சின்னத்தில் நின்று ஜெயிப்பேன் என்று சொல்லியுள்ளார். ஏற்கனவே உள்ளாட்சி, நகராட்சியில் தோற்றார்; பேரூராட்சியில் தோற்றார், மாநகராட்சியில் தோற்றார். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இப்போது தனியாகச் சின்னமிருந்தாலும் ஜெயிச்சு விடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.
எனவே அவர்தான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். நான் ஜெயக்குமாருக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் ஜெயக்குமாருக்கு தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் 'சிந்து அபிவிருத்தி இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து நடத்திக் கொள்ளுங்கள். அவருக்கு ரொம்ப பிடிச்ச பெயர் சிந்து. பாரதியார் கூட பாடுவார் 'சிந்து நதியின் இசை நிலவினிலே' என்று. ஜெயக்குமாருக்கு பிடித்த பெயர்; அமைந்த பெயர் சிந்து. எனவே சிந்து அபிவிருத்தி இயக்கம் என்று ஜெயக்குமார் ஆரம்பிக்கட்டும். அதற்குத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் இருக்கட்டும். மலேசியாவிலிருந்து கூட ஒரு பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்துச்சு பாலியல் விவகாரம் குறித்து. அங்க ஒரு கூட்டமே இருக்கிறது'' என்றார்.