கடந்த 2018 டிசம்பர் மாதம் அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடைபெற்றது.
அப்போது பேசிய செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் தம்பிதுரை மத்தியில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கின்றார். பாரத பிரதமரே எழுந்து நின்று துணை சபாநாயகரை வணங்கும் அளவுக்கு உள்ள பதவியை வைத்திருப்பவர். இந்த ஐந்து ஆண்டு காலம் கரூர் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் எதையும் செய்யவில்லை.
தம்பிதுரை அவர்களே இந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றித்தான் உங்களின் கடைசி வெற்றி. 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று இந்த நேரத்தில் சூளுரைக்கின்றோம். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என சவால் விட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. இதில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இருக்கும் தம்பிதுரை, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்ததோடு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். செந்தில்பாலாஜி போட்டியிடக்கூடும் என்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.