Skip to main content

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்ப்பலிக்கு பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான்... -தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! 

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

 

mk stalin


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த நிகழ்வு குறித்து தனது சமூக வலைதளபக்கங்களில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஜெயராஜ், பென்னிக்ஸ் இந்த இரு பெயர்களை, கடந்த சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. காவல்துறையினரின் வன்முறையால், அராஜகத்தால், இந்த இருவரை நாம் இழந்து நிற்கிறோம். கடந்த இரு தினங்களாக இந்தச் சம்பவம் குறித்து வரும் செய்திகளை, புகைப்படங்களை, உறவினர்கள் கூறும் நிகழ்வுகளை, நண்பர்கள் பகிரும் சோகங்களைக் காணும்போது மனம் ஏற்க மறுக்கிறது. மீளாச் சோகமும், தீராத் துயரமும், சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, என்னைத் தூங்கவிடவில்லை! இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும், சோகமும், அநீதியும் வார்த்தைகளால் அடக்க முடியாதவை.

இந்தச் சம்பவத்தைப் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொடூரத்தின் உச்சமாக, ஆசனவாயில் லத்தியைக் கொண்டு தாக்குதல், நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தல் என்று கேள்விப்படும் ஒவ்வொரு செய்தியும், மனதை உலுக்குகிறது. இந்த மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான செயல்கள், பேரதிர்ச்சி அளிக்கிறது. தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்குத் தாமதம் ஆக்கினார்கள் என்ற காரணத்திற்காக இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்த காவல்துறையினருக்கு யார் அனுமதி தந்தது?

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க, தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளோம். இந்த வழக்கின் விசாரணையை வேகமாகவும், தீவிரமாகவும், நேர்த்தியாகவும் நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் தி.மு.க. துணை நிற்கும். இந்த உயிர்ப்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார்” இவ்வாறு பேசியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்