நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தந்தை பெரியாரின் பெயரை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு சூட்டவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கையை மத்திய பாஜக அரசு கவனித்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது.
சென்னை மத்திய ரயில்வே நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என தேர்தல் காலத்தில் அதிமுக வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதனை சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றியது.
இதனை தொடர்ந்து, ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது திமுக!
இந்த நிலையில், கனிமொழியின் கோரிக்கைக்கு எதிராக களமிறங்குகிறார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா !
"தேசத்தின் விடுதலைக்காக வெள்ளையர்களை விரட்டியடிக்க நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையினரின் தடியடிக்கு ஆளானவர் கொடிகாத்த குமரன். காவல் துறையின் அடக்குமுறையில் மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய நிலையிலும், 'வந்தே மாதரம்!' என்ற வார்த்தையை உரக்கச் சொல்லியபடி கீழே சரிந்த போதும், தன் கையில் வைத்திருந்த, சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே தன்னுயிரை ஈந்தவர் கொடிகாத்த குமரன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் குமரன் . அவரது பெயரை, ஈரோடு இரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை மனு அளிக்க சசிகலா புஷ்பா திட்டமிட்டுள்ளார்" என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு தலைவர்களின் பெயர் வைப்பதில் கனிமொழியுடன் மோத தயாராகிறார் புஷ்பா.