சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. லஞ்சம் கொடுக்கப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அதுதொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.சசிகலா சுடிதார் அணிந்து சிறை வளாகத்தில் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிறையில் சசிகலாவை செல்போனில் படம் பிடித்தது யார்? சிறையில் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்களா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா, 'டிவி' அலுவலகம், 'மிடாஸ்' மதுபான ஆலையும் அடங்கும். ஐந்து நாட்களாக தொடர்ந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவங்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நேரத்தில், போயஸ்கார்டனில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மாற்றச் சொன்னதோடு, அதற்கு ஈடாக அவர்களது சொத்துக்களை தங்கள் பினாமிகளின் பெயருக்கு வாங்கி, ஜெயலலிதாவின் அறையில் ஆவணங்களாக வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு 1200 அதிகாரிகளை தயார் செய்து, சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் உள்ளிட்ட 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து, வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, அனைத்து சொத்துகளை கண்டறியும் பணி முடிந்துள்ளது. இதில், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர், பினாமி பெயரில், பல்வேறு நிறுவனங்களை நடத்துவது தெரிய வந்தது. அதில், 10 நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.