தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாரும், மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அ.இ.அ.தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களில், குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். இந்த புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார். இவரது செயல்பாடுகளை முடக்கி, மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காக இத்தகைய அடக்குமுறையை அவர் மீது ஏவி விடப்பட்டு இருக்கிறது.
பட்டியலின மக்களின் பாதுகாவலனாக தம்பட்டம் அடித்து கொள்வதற்காக அ.தி.மு.க. அரசு, ஆர்.எஸ். பாரதி மீது பொய் வழக்கு புனைந்திருக்கிறது. ஆதாரமற்ற முறையில் ஜோடிக்கப்பட்டு ஆர்.எஸ். பாரதி மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.