'கொள்ளையடித்த பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் பாஜகவினர். எனவே தான் அதிமுகவினர் 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' என திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ''ஆட்சிக்கு ஆபத்து வருவதற்கான சட்ட ரீதியான எந்த காரணமும் இல்லை. பொம்மை வழக்கிலேயே உச்சநீதிமன்றமே ஆட்சியை கலைப்பது எளிதல்ல என்று கூறியுள்ளது. அதற்கு முன்னாலே மாநில அரசுகளின் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அந்த நிலை பொம்மை வழக்குக்கு பிறகு எந்த மாநிலத்திற்கும் ஏற்படவில்லை.
ஒரே ஒரு வழியை பாஜக பின்பற்றுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால் அதை கொள்ளைபுற வழியாக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்துக் கொண்டார்கள். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் அந்த மாநில மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள் அங்கேயும் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள்.
ஜனநாயக முறை என்பது மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் ஆட்சி நடத்த வேண்டும். அந்த ஜனநாயகத்தை கொலை செய்யும் வகையில் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஆட்சியை மாற்றி அமைத்தது பாஜக என்பது வரலாறு. அந்த வகையில் பாஜக எதையும் செய்ய துணிந்தவர்களாக, அரசியல் சட்டத்தை மீறத் துணிந்தவர்களாக, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் புறக்கணிக்கத் துணிந்தவர்களாக அவர்கள் மாறி விட்டார்கள். எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், எப்படியாவது மறைமுகமாகவாவது கோடி கணக்கில் கொள்ளையடித்த பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே தான் அவர்களின் அடிவருடிகளான அதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.