அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது.
இதனால் அதிமுகவின் கொடிகள், சின்னங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஓபிஎஸ் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நேற்று (08-11-23) விசாரணையானது நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிவையற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுக பொதுக் குழுவில் நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களைக் மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போலவே ஓ.பி.எஸ் செயல்பட்டார்.
தொடர்ந்து, கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்தி வந்ததால் மக்கள் குழப்பம் அடைந்திருந்தனர். தற்போது உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பால் மக்களுக்கு தெளிவான பாதை தெரிந்துவிட்டது. அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய அதிமுக வின் கதவு திறந்து இருக்கும். ஆனால், எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுகவில் இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது” என்று கூறினார்.