காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.
பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.
திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.
உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.