நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.