
“புதுச்சேரிக்கு தமிழிசை வந்த பிறகுதான் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன” என தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தமிழக முதல்வர் அவர்களுக்கு பதில் அளிப்பதாக நினைத்து தவறான தகவல்களைப் பரப்புகிறார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், விமான நிலைய விரிவாக்கம் பற்றிய விவரம் தெரியாமல் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகிறார். நிலம் கையகப்படுத்துவதற்கான சர்வே வேலையே இதுவரை முடியாத நிலையில், தமிழக அதிகாரிகளுடன் இதைப் பற்றி புதுச்சேரி அரசு பேசவே இல்லை. எந்தவித கோப்புகளையும் அனுப்பவில்லை.
புதுச்சேரி அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதாக ஆளுநர் தெரிவிக்கிறார். ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகளை முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் முன்பே விமர்சனம் செய்து வருவதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. தமிழிசை பேசுவதை விட செயல்பாட்டில் காட்ட வேண்டும். சுற்றுலாத்துறை, மின்துறை, காரைக்கால் துறைமுகம், இவையெல்லாம் தனியார்மயம் ஆகுவதற்கு யார் காரணம்? புதுச்சேரி விமான நிலையத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். துணைநிலை ஆளுநர் என்ற நிலையை மீறி தமிழிசை அரசியல் செய்கிறார். அவர் அரசியல் செய்ய விரும்பினால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பழையபடி பா.ஜ.க. தலைவராக வரலாம்” என்றார்.