
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் உயரிய பொறுப்பு, செய்தி - மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. இதற்காக செய்தித்துறையில் 'உதவி மக்கள் தொடர்பு அதிகாரி' பணியிடங்கள் கடந்த 1970ல் இருந்து செயல்பட்டு வருகிறது. அப்போது இருந்த கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. 'உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்' அரசியல் சிபாரிசு அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில்கூட இந்த முறையில்தான் சுமார் 90 பேர் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். இதில் இன்னும் சுமார் 37 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பத்து வருடத்திற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அக்கட்சியினர் பலர் இந்த பதவியை எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில், இந்த பதவிகளை அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் முறையை நீக்கிவிட்டு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வரவேண்டும் என சிலர் அரசிடம் ஆலோசனை சொல்லியுள்ளனர்.
பத்து ஆண்டு காலத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் கட்சியினர் மிகவும் எதிர்பார்ப்பிலிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்வார்களா என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனர். கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டு, நியமிக்கப்படும் இந்த முறையை அப்படியே தொடர வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்றும் குழப்பத்தில் உள்ளனர்.