Skip to main content

கொரோனா வைரஸ்!  பிரசாந்த் கிஷோரைத் தாக்கும் ஜான் ஆரோக்கியசாமி !

Published on 25/03/2020 | Edited on 25/03/2020


           

தேசம் முழுவதும் கரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. இந்தச் சூழலில், கரோனா வைரஸின் தாக்கம் குறித்து கவலைப்படாமல் ட்விட்டரில் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் பிரபல தேர்தல் வியூக வல்லுநரும் திமுகவின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோருக்கு எதிராகத் தேர்தல் வியூக வல்லுநர்கள் பலரும் கச்சைக் கட்டுகிறார்கள்.
           

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் போல, இந்தியாவில் ஜேபிஜி-பேக் நிறுவனம் புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர்களில் ஒருவரும் ப்ராண்டிங் வல்லுநருமான ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த் கிஷோருக்கு காட்டமாக ஒரு மேசேஜ் அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய தகவல்கள் தேர்தல் வியூகம் வகுப்பாளர்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. 

 

jj



            

பிரசாந்த் கிஷோருக்கு அனுப்பப்பட்ட தகவலில், ‘’ அன்பிற்கினிய பி.கே., நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு போதுமான அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்வதிலோ, அவர்களை ஆயத்தப்படுத்துவதிலோ  இங்குள்ள அரசுகள் பாதியாகவோ அல்லது முழுமையாகவோ தோல்வி அடைந்திருக்கலாம்.

          

இந்தச் சூழலை பயன்படுத்தி, ட்விட்டரில் அரசியல் பிரச்சாரம் செய்யும் கேவலத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே துறையில் சக வியூக வல்லுனராக, 5, 7 & 10 வரிசை செயல் திட்ட மார்க்கெட்டிங்கில் உங்களது திறனைப் பாராட்டுகிறேன்.
                

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் சுகாதார கொள்கை அலுவலராகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களைச் செயல்படுத்தும் துறையில் அனுபவம் கொண்டவருமான நீங்கள், கொள்கையை உருவாக்குவதில் செல்வாக்கு கொண்ட நீங்கள், நாடு இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அசாதாரண சூழலில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசனை சொல்வதற்கு மத்திய அரசின் தலைமையைத் தொடர்பு கொள்ள ஒரு அங்குலம் கூட நகரவில்லையே, ஏன்? அல்லது வேறு வழியில் இந்தியா இயங்க வேண்டும் என்றோ, ஒரு மாநிலம் எவ்வாறு செயல்பட வேண்டும் ; எப்படிச் செயல்படக் கூடாது என்பது பற்றியோ விளக்கியிருக்கலாம் (CAA, NPR, NRC வந்தால் அப்படி ஆகிவிடும், இப்படி ஆகிவிடும் என்று ட்விட்டரில் எந்நேரமும் கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டதை விட, உருப்படியான யோசனையை மக்களுக்கு தெரிவித்து இருக்கலாம்). 
    


சீனா எதைச் சந்தித்தது என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவும் விரைவில் எதைச் சந்திக்கும் என்பதும் தெரியாதா? இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் நெருக்கடியை முறியடிக்கும் திட்டம் ஏதேனும்  இருக்கிறதா? அல்லது இருந்ததா? என்பதைப் பற்றி பதிவு செய்திருக்கலாம். ஆனால், அப்படி எந்த அக்கறையும் உங்களுக்கு இல்லையே ! கரோனா வைரஸ் அச்சுறுத்தும் சூழலில், எப்போதும் அரசை விமர்சித்துக் கொண்டிருப்பதை விட, ஏதாவது ஒரு மாநில அரசுக்காவது  உருப்படியான பரிந்துரைகள் வழங்கியதுண்டா? ‘’ என்கிற ரீதியில் கடுமையாக விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி.

 

சார்ந்த செய்திகள்