தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு பேசுகையில், ''தமிழக முதல்வரின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மிகச் சிறப்பான அமைச்சர் என்று நல்ல பெயரை இவர் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறதே' என்ற கேள்விக்கு, ''இல்லை.. இல்லை.. அவர் எங்களது நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். இவர் அமைச்சராக அவரும் ஒரு காரணம். அவர்தான் மிக முக்கியக் காரணம்'' என்றார்.