Skip to main content

காவல்துறை அதிகாரிகளை டிரான்ஸ்பர் பண்ணும் ஓய்வு பெற்ற முன்னாள் உளவு அதிகாரிகள்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

trichy

 

 

ஶ்ரீரங்கத்திற்கு வருவது என்னுடைய வீட்டிற்கு வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் முதல்வர் ஜெ. பேசிய பிறகு ஶ்ரீரங்கம் தொகுதி தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியது. அந்த தொகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக இருந்த ஏ.சி. அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்ய, திருச்சியின் முன்னாள் உளவு மற்றும் நுண்ணறிவு அதிகாரிகள் முயற்சி எடுத்திருப்பது தற்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஶ்ரீரங்கம் பகுதியில் எப்போதும் மணல் கொள்ளை கொடிக்கட்டிப் பறக்கும். இந்த மணல் கொள்ளையர்களுக்கு அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை துணையாக இருப்பார்கள். இதே போன்று ரவுடிகளும் கஞ்சா விற்பனையை முக்கிய தொழிலாக நடத்தி வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற திருச்சியில் உச்சக்கட்ட நுண்ணறிவு அதிகாரியாக இருந்தவர் மிகவும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

 

இந்த நேரத்தில் இலஞ்ச ஒழிப்பு துறையிலிருந்து மாற்றம் ஆகி ஶ்ரீரங்கம் ஏ.சி. ஆக வந்த இராமசந்திரன் மணல் கொள்ளை முதல், கஞ்சா வரை கடுமையாக நெருக்கடி கொடுத்தார்.

 

அப்போது திருச்சியின் உச்சக்கட்ட நுண்ணறிவு அதிகாரி – ஏற்கனவே ஓய்வு பெற்ற உளவு அதிகாரி துணையோடு தன்னுடைய இடத்திற்கு தன் மச்சானைக் கொண்டு வருவதற்கு முதல்வர் மகன் வரை கடுமையான முயற்சி செய்தார். அந்த பரபரப்பான நேரத்தில் நக்கீரன் இணையத்தில் திருச்சி காவல்துறையை மாமனும் மச்சானுமே ஆளனுமா? என்கிற தலைப்பில் செய்தி வெளியானது.

 

இந்த செய்தியின் எதிரொலியாக ஶ்ரீரங்கம் ஏசியாக இருந்த இராமசந்திரன் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஏசியானர், ஶ்ரீரங்கத்திற்கு மணிகண்டன் என்பவர் ஏசியாக நியமிக்கப்பட்டார்.

 

ஏசி மணிகண்டன், இராமசந்திரன் விட்டுச் சென்ற மணல் கொள்ளையர்களை, கஞ்சா விற்பனையாளர்களை கண்டறிந்து வழக்கு பதிந்து அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஶ்ரீரங்கம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏ.வி.எம். மணி, கார்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். அவர்கள் முன்னாள் நுண்ணறிவு அதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள், அவருக்காகத்தான் செய்கிறோம் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஏசி மணிகண்டனோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வழக்குப்பதிவு செய்திருக்கிறார். மணல் கொள்ளையர்கள், இவர் இங்கே நீடித்தால் உங்களுக்குத்தான் சிக்கல் என நுண்ணறிவு அதிகாரிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஓய்வு பெற்ற நுண்ணறிவு அதிகாரி, ஏசி மணிகண்டனை அங்கிருந்து மாற்றுவதற்கு மீண்டும் ஓய்வு பெற்ற உளவு அதிகாரியுடன் கைகோர்த்து, ஏசி மணிகண்டனை அங்கிருந்து மாற்றுவதற்கு தமிழக அமைச்சர், முதல்வர் மகன், தமிழக முன்னாள் உளவு அதிகாரி என 3 வழிகளில் காய்களை நகர்த்தி ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 

திருச்சியின் ஓய்வு பெற்ற முன்னாள் உளவு அதிகாரி, தனக்கு நெருக்கமான தமிழக உளவு அதிகாரியிடம் கிருஷ்ணமூர்த்தியை ஶ்ரீரங்கத்திற்கு நியமிக்க சொல்லி சிபாரிசு செய்கிறார். அதே நேரத்தில் திருச்சி முன்னாள் நுண்ணறிவு அதிகாரி, முதல்வர் மகன் மிதுனிடம் கோடிலிங்கம், மற்றும் கிருஷ்ணமூர்த்தியைச் சிபாரிசு செய்கிறார்.

 

தங்கமான அமைச்சரின் மாவட்டத்தில் டி.ஆர்.ஓ.வாக இருப்பவரின் கணவர்தான் ஏசி கிருஷ்ண மூர்த்தி. இவர் தங்கமான அமைச்சர் மூலம் முன்னாள் தமிழக உளவு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சத்தியமூர்த்தியிடம், உத்திரமேரூர் ஏசி கிருஷ்ணமூர்த்தியை, ஶ்ரீரங்கம் ஏசியாக நியமிக்க சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார்.

 

முதல்வர் ஜெ. பெயரில் ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்தில், நேர்மையான அதிகாரிகளை ஶ்ரீரங்கத்தில் மணல் கொள்ளைக்காக மாற்றுவதற்கு ஓய்வு பெற்ற உளவு, நுண்ணறிவு அதிகாரிகள் களத்தில் இறங்கி இருப்பது தான் வேதனையின் உச்சம்.

 

 

சார்ந்த செய்திகள்