பிப்ரவரி 1-ந் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலாகப் போகிறது என்கின்றனர். அதில் தனி நபர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்றும், வரி செலுத்தும் சதவீதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்று சீரியசாக பேச்சு அடிபட்டு வருகிறது என்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க. அன்புமணிக்கும் த.மா.கா. வாசனுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது.
சமீபத்தில் பிரதமரின் சகோதரர் தமிழ் நாட்டுக்கு வந்து ராமதாஸை சந்தித்துப் பேசியிருப்பதால் அன்புமணி பெயர் கேபினெட்டில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் உறுப்பினர்கள் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு எம்.பி.க்களின் செயல்பாடுகள், வருகைப்பதிவு போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் உள்ளார். இவர் வருகைப்பதிவு 15 சதவிகிதம் மட்டுமே என்றும் பெரும் விவாதம் கிளம்பியது. பின்பு இது தொடர்பாக பாமக சார்பாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.