Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு; அண்ணாமலை மழுப்பல் பதில்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

AIADMK-BJP Alliance Breakdown Annamalai is the elusive answer
கோப்புப்படம்

 

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்ததுடன் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

 

பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, “நான் இது குறித்து பிறகு பேசுகிறேன். யாத்திரையின் போது அரசியல் பேசமாட்டேன்” எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்