சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், கலைஞர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இல்லாத 2021 சட்டமன்றத் தேர்தலை நாம் சந்திக்கப்போகிறோம். இளைஞர்கள் வேறு கட்சிக்கு போகக்கூடாது. வடமாவட்டங்களில் 90 தொகுதிகளில் உள்ள இளைஞர்களை அன்புமணியிடம் ஒப்படையுங்கள்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்களுக்கு என 3 அமைப்புகளை உருவாக்க போகிறேன். தி.மு.க. கூட்டணியில் இருந்து 18 பேர் வெற்றி பெற்றோம். அப்போது வெளியில் இருந்து ஆதரவு மற்றும் ஆலோசனை கொடுத்தோம். அதேபோல்தான் இந்த அரசுக்கும் ஆலோசனை கொடுத்து வருகிறோம். அப்படிதான் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என திட்டமிட்டு செயல்படுங்கள். மனம் இல்லாதவர்கள் விலகி, செயல்படுபவர்களுக்கு வழி விடுங்கள். மிகப்பெரிய இளைஞர் சக்தி நம்மிடம் உள்ளது. அதுவேறு யாரிடமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
90 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே, அப்படியென்றால் வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறதா? என்று கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.