![parliament budget session opposite party issue in fifth day](http://image.nakkheeran.in/cdn/farfuture/FoeaItFuzU-s2PadYtAd033psYdSTzhSiDOkaD1v5aM/1679037316/sites/default/files/inline-images/001-art.jpg)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியதில் இருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் கடந்த நன்கு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 5வது நாளாக கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று எதிர்க்கட்சிகளும் அதானி முறைகேடு தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று இரு அவைகளிலும் மையப்பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் முன்புள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதானி முறைகேடுகளை நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து விசாரிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்பி., திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.