முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், “ஆறுதல் சொன்ன அனைவருக்கும் எனது சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தாயின் மறைவு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்குகின்றன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற ஜெயலலிதாவின் இலட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும் கழகப் பணிகளும் தொடரும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைந்ததன் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். தேனி பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த அண்ணாமலை அவருக்கு ஆறுதல் கூறினார்.