Skip to main content

கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரம் இல்லை -  உயர்நீதிமன்றம் உத்தரவு 

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

 

dmk flag

 

தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கோ அதில் தலையிடுவதற்கோ யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சார்பில் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 24.02.2018ம்தேதி வாகைக்குளம் விமான நிலைய சாலை அருகே, இந்திய உணவுக்கழக குடோன் எதிரே, புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே என தனியாருக்கு சொந்தமான இடங்களில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிகள் ஏற்றப்பட்டது.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேஷ் அவர்களின்  உத்தரவின்பேரில் தூத்துக்குடி வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 27.02.2018ம் தேதி எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அதிகாலை 1.30மணி அளவில் திமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்ட தனியாருக்குரிய இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விலை உயர்ந்த துருப்பிடிக்காத கொடிக்கம்பி கயிறுகளையும், இருவண்ணக்கொடியையும் கிழித்து எறிந்து, கொடிக்கம்பி கயிறுகளை திருடிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே தூத்துக்குடி சார்-ஆட்சியர் கடந்த 01.03.2018ம்தேதி அன்று திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133ன்படி 07.03.2018ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் முறையற்ற இந்த தன்னிச்சையான செயலுக்கும், தூத்துக்குடி சார்-ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவிற்கும் தடை விதிக்ககோரி திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கின் விசாரணை இன்று(06.03.2018) நடைபெற்றது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து  நீதியரசர் ராஜமாணிக்கம் ., "தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கோ அதில் தலையிடுவதற்கோ யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இந்த கொடிக்கம்பங்களை அகற்றும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கோ, மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கோ அல்லது அவருக்கு கீழ்பணியாற்றும் காவல்துறையினருக்கோ இல்லை. எனவே இந்த கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்