Skip to main content

புதிய அரசு மணல் குவாரி... பா.ம.க. தடுத்து நிறுத்தி போராட்டம்! 

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

Struggle

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள மணிமுத்தாறில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாநில சுற்றுசுழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன், மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் மூலம் ஓர் ஆண்டிற்காக அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, இன்று காலை தொடங்கப்பட்டது. 

 

இந்த ஆற்றில் நீர்ப்பாசன திட்டத்திற்காக கடந்த 1865 ஆம் ஆண்டு அனைக்கட்டு கட்டப்பட்டு வடக்கு பாசனத் திட்ட வாய்க்கால் மூலம் 44,400 ஏக்கர் பரப்பளவிலும், தெற்கு பாசன திட்ட வாய்க்கால் மூலம் 31,000 ஏக்கர் பரப்பளவிலும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். 

 

ஏற்கனவே என்.எல்.சி. சுரங்கங்கள் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதளத்திற்குச் சென்றுள்ள நிலையில், தற்போது அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டால் முற்றிலுமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது என்றும், மணல் குவாரி அமைக்கக் கூடாது என்றும் கூறி அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

 

அதையடுத்து அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்  மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் வட்டாட்சியர் செல்வமணி, காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விவசாயிகளை பாதிக்கின்ற எவ்விதச் செயலையும் பா.ம.க. ஆதரிக்காது என்றும், ஒரு பிடி மணலைக் கூட அள்ள அனுமதிக்க மாட்டோம் என்றும் பா.ம.க.வினர் உறுதியாகத் தெரிவித்ததையடுத்து மணல் லாரி மற்றும் மணல் அள்ளும் இயந்திரத்தை வெளியே எடுத்துச் சென்றனர். அதையடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்