நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பல்வேறு கரங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமான காரணம் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு கொடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மாநிலங்களைவையில் அதிமுக சார்பாக 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில், ஒரு சீட் கூட்டணி கட்சியான பாமகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட்டை அதிமுக யாருக்கு கொடுக்கப்படும் என்ற நிலையில் கட்சிக்கு நிதி கொடுப்பவருக்கு கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை முடிவெடுத்தாக சொல்லப்படுகிறது. அதன் படி ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமிக்கு கொடுக்கப்படும் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இன்னும் ஒரு சிலர் நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுக்கப்படும் என்று கூறிவருகின்றனர். மேலும் எடப்பாடி ஆதரவு இருக்கும் ஒரு முன்னாள் எம்.பி.க்கும் ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்றும் கூறிவருகின்றனர். இதன்படி பார்த்தால் அதிமுகவில் தம்பிதுரைக்கும் , நத்தம் விஸ்வநாதனுக்கும் கொடுக்கப்படும் என்று சொல்கின்றனர். அதிமுகவில் மேலும் ஒரு சில சீனியர்களும் ராஜ்யசபா சீட் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.