இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை விட மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சி மிக மோசமானதாக இருப்பதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா, தொடர்ந்து மோடி அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகி, அரசியல் வாழ்க்கையை துறப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த யஷ்வந்த் சின்கா, இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை விட மோடி அரசின் இந்த நான்காண்டு கால ஆட்சி மிகமோசமானதாக உள்ளது என்றும், இந்த ஆட்சியில்தான் நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் என்.ஐ.ஏ. போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்ட பயன்படுத்துகிறார்கள். என் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை பாஜக உறுப்பினர்களே பலரும் தனிப்பட்ட முறையில் ஆமோதிக்கின்றனர். பலரும் வாய்திறக்க தயங்குகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.